குழந்தைகள் ஊர்ந்து செல்லத் தொடங்கியதுமே, அருகில் இருக்கும் ஆள்களைவிட, பக்கத்தில் பார்க்கும் பொருள்களைப் பிடித்து விளையாடுவதில்தான் ஆர்வமாக இருப்பார்கள். அவற்றை ’இப்படியும் பயன்படுத்தலாம்’ என நமக்கு சொல்லித் தரும் அளவிற்கு எதையாவது அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். நாமும் வீட்டில் உள்ள பொருள்கள் தானே என்று அஜாக்கிரதையாக விட்டுவிடுவோம். ஆனால், அத்தகையப் பொருள்களில்தான் ஆபத்து மறைந்து உள்ளது என்பதை நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆறு பொருள்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்!
சிங்க் கிளீனர்:
சமையல் அறையின் சிங்க்கை சுத்தமாக வைத்துக்கொள்ள உபயோகிக்கும் கிளீனரில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளன. அவை உடலில் பட்டால் தோல், கண்களில் எரிச்சலுக்கு வழிவகுக்கும். பிற உடல்நலப் பிரச்னைகளையும் அது ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளிடமிருந்து அவற்றை விலக்கியே வைக்கவும். மேலும், நீங்கள் அதனைப் பயன்படுத்தும்போது, அறையில் சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதிசெய்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டே உபயோகம் செய்யுங்கள்.
ரூம் பிரஷ்னர்:
ரூம் பிரஷ்னர் மூலமாக வெளியேறும் வாசனை திரவியம் பலருக்கு தலைவலியை ஏற்படுத்தும். இவை மூக்கு, தொண்டை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தவல்லது. அதுமட்டுமின்றி ரூம் பிரஷ்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள். எனவே, மிகுந்த ஜாக்கிரதையாக அதனை உபயோகிக்க வேண்டும்.
பிளீச்சிங் பவுடர்:
பிளீச்சிங் பவுடரில் உள்ள ரசாயனமானது சோடியம் ஹைபோகுளோரைட் என அழைக்கப்படுகிறது. தவறுதலாக அதை சாப்பிட்டு விட்டால் பெரும் தீங்கு ஏற்படுத்திவிடும். வயிறு, உணவுக் குழாயை சேதப்படுத்தி விடும். இதை ஒருபோதும் மற்ற ரசாயனங்களுடன் கலந்துவிடக்கூடாது. குறிப்பாக அம்மோனியாவுடன் இணைத்துவிட்டால் பெரும் நச்சுப் புகையாக மாறிவடும்.