டெல்லி: தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக (ஓபிசி) மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மாநில அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த மனு நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று (அக்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் வி. கிரி ஆஜரானார். அதிமுக., திமுக, தரப்பில் பாலாஜி சீனிவாசன், பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு விரிவுப்படுத்துவது சாத்தியமில்லை” எனத் தெரிவித்திருந்தனர்.
மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்குரைஞர் சர்மாவும், “இடஒதுக்கீடு அட்டவணை ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டது, ஆகவே நடப்பு கல்வியாண்டில் இது சாத்தியமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு சாத்தியம் இல்லை என தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக ஜூலை மாதம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் குழு அமைக்கும்படி உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவு நடப்பாண்டுக்கு பொருந்தாது எனத் தெரிவித்திருந்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு நாளை (அக்.27) தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒபிசி இடஒதுக்கீடு; பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!