இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒன்பது கோடியே 17 லட்சத்து 87 ஆயிரம் வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பெண்களுக்கு நான்கு கோடியே 65 லட்சத்து 85 ஆயிரம் நாள்கள் வேலை கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 48 லட்சத்து 14 ஆயிரத்து 330 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 234 பெண்கள் அடங்குவர். இதன்மூலம் கடந்த நான்கு ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பெண்கள் பங்கேற்கும் விழுக்காடு அதிகரித்துள்ளது.
2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பெண்களின் பங்களிப்பு 49.31 விழுக்காடாகவும், 2018-19 ஆண்டில் 50.05 விழுக்காடாகவும் இருந்தது. இந்த ஆண்டு அது 50.75 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த நான்கு மாதங்களில் இந்தப் பங்களிப்பின் விழுக்காடு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், பெண்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்கும் மாவட்டத்தில் துர்க் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. துர்க்கில், பெண்களின் பங்களிப்பு 64 விழுக்காடாக உள்ளது. அதேபோல், பலோடில் பெண்கள் பங்களிப்பு 62 விழுக்காடாகவும், ராஜ்நந்த்கானில் 59 விழுக்காடாகவும், ராய்ப்பூரில் 54 விழுக்காடாகவும், பஸ்தரில் 52 விழுக்காடாகவும், பிலாஸ்பூர், தம்தாரி, கோண்டகாவ்ன் மற்றும் நாராயன்பூரில் தலா 51 விழுக்காடாகவும் உள்ளது.