மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முன்னணி நிலவரம் இன்று காலை முதல் வெளியாகின. கருத்துகணிப்பின்படி பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
அதாவது மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாரதிய ஜனதா 101 தொகுதிகளிலும் சிவசேனா 57 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா என் வீட்டுக்கு வந்து என்னிடம் பேசினார். இதுவே சரியான தருணம். நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். ஆட்சி ஆதிகாரத்தில் பாதிக்கு பாதி அதிகாரம் வேண்டும். (அதாவது முதல் இரண்டரை ஆண்டுகள் பாரதிய ஜனதா, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனா ஆட்சி).
அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாரதிய ஜனதாவுக்கு குறைவான இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டோம். ஆனால் ஒவ்வொரு முறையும் பாரதிய ஜனதாவுக்கு இடமளிக்க முடியாது. எங்கள் கட்சியும் வளர வேண்டும். இதனை பாரதிய ஜனதா புரிந்துகொள்ள வேண்டும்.
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு முன்னர், ஆட்சிப் பகிர்வு குறித்து வெளிப்படையாகப் பேசி ஒரு முடிவுக்கு வருவேன். மாநில மக்கள் தங்களின் ஜனநாயகத்தை உயிருடன் வைத்துள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வென்றுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கால்களை தரையில் வைக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் தங்களுக்கான இடத்தை காட்டுவார்கள்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
இதையும் படிங்க: ஓர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே வெற்றி!