இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தற்போது வரை 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்ததால், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சிறிது சிறிதாகத் தளர்வுகளை அறிவித்து வருகிறது, மத்திய அரசு.
அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த விமான சேவை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டுமே இன்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 வயதுச் சிறுவன் ஒருவன், தனியாகப் பயணித்து டெல்லியிலிருந்து பெங்களூரு வந்தடைந்துள்ளான்.
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள தன் தாத்தா வீட்டுக்குச் சென்ற பெங்களூருவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விஹான் சர்மா, ஊரடங்கால் அங்கேயே சிக்கி கடந்த 2 மாதங்களாகத் தன் தாயை விட்டுப் பிரிந்து தவித்து வந்துள்ளான்.