1971-ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. பாகிஸ்தான் 11 இந்திய வான் தளங்களின் மீது தாக்குதல் நடத்தி போரினைத் தொடங்கியது. ஆனால், இந்தியா மிக விரைந்து முன்னேறி சுமார் 15,010 கி.மீ பரப்பளவு அளவுக்கு பாகிஸ்தானைக் கைப்பற்றியது.
இறுதியாக, பாகிஸ்தான் தனது நாட்டில் பாதியையும், கிழக்குப் பகுதியில் அதன் படைகளையும் இழந்து பகிரங்கமாக இந்தியாவிடம் சரணடைந்தது. இப்போர் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவினைத் துண்டித்தது. இப்போரின்போதே, பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது.
1971ஆம் ஆண்டு போரினையடுத்து, இந்திரா காந்தியும், பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஜூல்கர் அலி பூட்டோவும் 1972ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் சிம்லாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இரு நாடுகளுக்கிடையேயான அமைதி, நட்புறவு குறித்த அம்சங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூலை 2ஆம் தேதி சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான கதை மிகவும் சுவாரசியமானது. ராஜ்பவன் அலுவலர்கள் அன்று இரவு இரு நாட்டு கொடிகளையும், நாற்காலிகளையும், படங்களையும் பத்திரமாக பாதுகாத்து வைத்தனர். சிம்லா ஒப்பந்தத்தின்போது பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஜூல்பிகார் அலி பூட்டோ அவரது மகள் பெனாசிர் பூட்டோவுடன் இருந்தார். எந்தவொரு திட்டமிடுதலுமின்றி மிகவும் எதேச்சையாக சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னறிவுப்புகள் ஏதும் இல்லாததால் ராஜ் பவனிலிருந்த பெரும்பாலான பத்திரிகையாளர்கள் வெளியேறியிருந்தனர். ராஜ் பவனில் மிகச் சொற்பமானவர்களே இருந்தனர். அங்கிருந்த மேஜைகளில் விரிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெறுமனே இருந்தன. சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட பேனா கூட இல்லாமல் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் கடன் வாங்கி கையொப்பமிடப்பட்டது.
சிம்லா ஒப்பந்தத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
இந்த ஒப்பந்தம் ராஜதந்திரமாக பாகிஸ்தான் வங்கதேசத்தை அங்கீகரிக்க வழி வகுத்தது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே இருந்த பிணக்கு, மனக்கசப்புகள் மற்றும் காஷ்மீர் குறித்தான சர்ச்சைகள் முடிவுற்று இருதரப்பு நல்லுறவுகள் மேம்பட வழிவகுத்தது. இந்தியா போரில் சிறைபிடித்த 93,000 பாகிஸ்தான் போர் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது.
இந்தியா கைப்பற்றிய பாகிஸ்தான் பிரதேசங்களை திருப்பித் தர ஒப்புக்கொண்டது. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இடைத்தரகர் அல்லது மூன்றாம் தரப்பு சம்பந்தப்படாமல் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. இந்தியாவின் இந்த நிலைப்பாடு பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டாலும், இந்தியா-பாகிஸ்தான ஆகிய இரு நாடுகளுக்கிடேயேமிருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி நல்லுறவுக்கு வித்திட்டது.
சிம்லா ஒப்பந்தம் 47 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திடப்பட்டு, 'நல்ல அண்டை உறவுகளுக்கு ஒரு கட்டமைப்பை வழங்கியிருந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் உறவில் இன்றுவரை தொடர்ந்து முரண்பாடே நீடித்து வருகின்றது. புல்வாமா தாக்குதலில் இந்திய சிஆர்எப் அலுவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பாகிஸ்தான் பாலாகோட் பயங்கரவாத முகாமில் இந்திய விமானப்படை நடத்திய எதிர் தாக்குதல் ஆகியவை இரு நாடுகளுக்கிடையில் உருவாக்கிய பதட்டமே அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு.