மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவில் நாடு தழுவிய அவசர நிலையை (எமர்ஜென்சி) கொண்டுவந்தார். 21 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலையை, மாநிலங்களுக்கு இடையே அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ரூதீன் அலி அஹமது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 352 (1)ன் கீழ், 'உள்நாட்டு குழப்பம்' என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து பிரகடனப்படுத்தினார்.
ஈடிவி பாரத்தின், இந்தக் கட்டுரையில் அவசரக் கால நிகழ்வுகளை பார்க்கலாம்.
அவசர நிலைக்கு வழிவகுத்தது என்ன?
நாட்டின் அவசர நிலைக்கு பல காரணிகளும், சம்பவங்களும் காரணிகளாக திகழ்ந்தன. நாடு முழுக்க அரசுக்கு எதிரான கலவரங்கள், கிளர்ச்சிகள் நடைபெற்றன. இதுமட்டுமின்றி நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார சிக்கல்கள் மிகுந்து காணப்பட்டது.
- நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னதாக 1970களில் நடந்த முக்கிய காரணிகள்:
நவநிர்மாண் அந்தோலன் போராட்டம்
குஜராத்தில் 1970களில் அமைந்த காங்கிரஸ் அரசாங்கம் கல்விக் கட்டணங்களை உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன்பின்னர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனால் அரசுக்கு எதிரான போராட்டம் மக்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவியது. ஆங்காங்கே புரட்சிகள், புதிய புதிய போராட்டங்கள் வெடித்தன. காங்கிரஸ் தலைமையிலான, ஊழல் அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்கு முதலில் செவிசாய்க்க மறுத்த மத்திய அரசாங்கம், இறுதியாக 1974ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாநில அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.
இந்தப் போராட்டம், 'நவநிர்மாண் இயக்கம்' என்று அறியப்படுகிறது.
ஜேபி இயக்கம்
1974ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிகார் அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வெடித்தது. அப்போது, மாணவர்களுக்கு அரசியல் ஆதரவை காந்திய சமூகவாதி ஜெய்பிரகாஷ் நாராயணன் வழங்கினார். இதனால், “ஜேபி இயக்கம்” என்றும் “பிகார் இயக்கம்” என்றும் பின்னாள்களில் இந்தப் போராட்டம் பெயர் பெற்றது.
ஜெய்பிரகாஷ் நாராயணன், மொத்தப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். இதில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பலரும் பங்கெடுத்தனர். அவர்கள் மாநில அரசை கலைக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
மேலும் இந்தப் போராட்டம், “நாடாளுமன்றத்துக்கு (நாட்டுக்கு) எதிரானது” என இந்திரா காந்தி கூறினார். இதைத்தொடர்ந்து இது, காந்திக்கு எதிரான போராட்டமாக திரும்பியது.
ரயில்வே கிளர்ச்சி
1974ஆம் ஆண்டு மே மாதம், சோசலிச தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் ரயில்வே வேலைநிறுத்தம் ஒன்று நிகழ்ந்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் பொருள்கள் மற்றும் பொது இயக்கம் சீர்குலைந்தது. மூன்று வாரங்களுக்கு நீடித்த இந்த வேலைநிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர். (காந்திக்கு பிறகு இந்தியா என்ற நூலில் பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பல்வேறு ஆதாரங்களை தொகுத்து இதனை பதிவுசெய்துள்ளார்.)
இந்தக் கிளர்ச்சி அடுத்தடுத்த நாள்களில், ஆயிரக்கணக்கான கைதுகள், சித்ரவதைகள், மரணங்கள், ஊழியர்கள் வேலை பறிப்பு என அரசால் நசுக்கப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
1971ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி ரேபரேலி (இன்றுவரை காங்கிரஸின் கோட்டை) தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், இந்திராவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தீர்ப்பு கூறிய நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
மேலும், இந்திரா தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகள் தடை விதித்தார். இந்நிலையில், “தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 20 நாள்கள் வரை கால அவகாசம் வேண்டும், அதுவரை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என இந்திரா தரப்பு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது. அதை ஏற்று நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியது.
இந்த நிலையில், ஜூன் 24, 1975ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்த்து இந்திரா காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால தடை விதித்தார்.
வாசகர்கள் கவனிக்க: இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.