ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவான 370ஆவது சட்டப்பிரிவு அண்மையில் நீக்கப்பட்டது. அத்துடன் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
இதற்கெதிராக எந்தவொரு வன்முறை செயல்களும் நடைபெற்றுவிடக் கூடாது எனக் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு கைது செய்தது.
சுமார் 50 நாட்களாகியும் பரூக் அப்துல்லா போன்ற மூத்த அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படாததைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்களான வைகோ, டி.ஆர்.பாலு போன்றவர்கள் காஷ்மீர் தலைவர்களின் விடுதலை தொடர்பாகத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.