ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள செல்ஃபோன்களை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்றது. ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரிக்கப்பட்ட செல்ஃபோன்களை ஏற்றிக்கொண்டு கொல்கத்தா நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. தகாதர்த்தி அருகே தேசிய நெடுஞ்சாலை 16இல் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் லாரியில் வந்த மூன்றுக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட மர்ம கும்பல் திடீரென கண்டெய்னரை வழிமறித்தது.
கண்டெய்னர் லாரிக்குள் ஏறிய கும்பல், லாரியுடன் சேர்த்து டிரைவரையும் வேறு இடத்திற்கு கடத்திச் சென்றனர். பின்னர் அதில் இருந்த ரூ. 4 கோடி மதிப்புள்ள செல்ஃபோன்களைத் தாங்கள் கொண்டு வந்த லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து பித்ரகுண்டா அருகே கண்டெய்னரும், அதன் டிரைவரையும் விட்டுச் சென்றனர். பின்னர் கண்டெய்னர் டிரைவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு நடந்தவற்றை விவரித்துள்ளார்.