மழை வெள்ளத்தால் வட மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் 25 பேரும், உத்தரகாண்டில் 12 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் சுமார் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் பத்திரமான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளும், விளைநிலங்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்யும் கனமழையால் அங்கு சாலைகள், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பாதுகாப்புப் படையினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றனர்.
கனமழையால், டெல்லியில் உள்ள யமுனை நதியில் வெள்ள அபாய கட்டத்தை தாண்டியும் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதியின் முழு உயரமான 205.33 மீட்டரைக் கடந்து 205.94 மீட்டராக வெள்ளம் கரையைக் கடந்து ஓடுகிறது. இதனால் 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், வடமாநிலங்களில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.