ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு துறைகளின் ஊழல் தடுப்பு (விஜிலென்ஸ்) அலுவலர்களுக்கு உச்சபட்ட அதிகாரத்தை துணைநிலை ஆளுநர் கமனோஜ் சின்ஹா வழங்கியுள்ளார்.
ஊழல் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தாமதமின்றி முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யவும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
யூனியன் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்புப் பணியகம் சார்பில் சோதனைகளை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு துறைகளில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுவந்த மூத்த அலுவலர்கள் 35 பேர் தகுந்த ஆதாரங்களோடு அடையாளம் கண்டறியப்பட்டனர்.
உணவு, சிவில் சப்ளை, பொது விநியோகத் துறையைச் சேர்ந்த ஐந்து அலுவலர்கள், போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள், வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள், பொதுப்பணித்துறைச் சேர்ந்த இரு அலுவலர்கள், வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 24 அலுவலர்கள் என ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட 35 மூத்த அலுவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் இன்று (நவம்பர் 18) அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இந்தாண்டு (ஜனவரி முதல் அக்டோபர்) மொத்தம் 61 ஊழல் வழக்குகளை ஊழல் தடுப்பு பணியகம் பதிவு செய்திருந்தது. 2019ஆம் ஆண்டில், பல்வேறு அரசு அலுவலர்களுக்கு எதிராக மொத்தம் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.