மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் நக்ராகடா வழித்தடத்தில் நேற்று முன் தினம் காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தது, ஆனால் வேகமாக வந்த ரயில் யானை மீது மோதியது. இதில் யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் யானையின் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தது. உடம்பில் ஏராளமான காயங்களுடன் எழுந்து கூட நிற்க முடியாத நிலையில், ரத்தம் வழிய அந்த யானை தண்டவாளத்திலிருந்து மெதுவாக தவழ்ந்து காட்டுக்குள் சென்றது.
இந்த விபத்தால் ரயிலின் எஞ்சின் பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், காயமடைந்த யானைக்கு அங்கேயே முகாமிட்டு சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டதாகவும், வலியால் அந்த யானை கதறித்துடித்தது என வனத்துறை அலுவலர்கள் கூறினர். எனினும், சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்தது.