மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த பல செவிலியர் கடந்த சில நாள்களாக வேலையை உதறிவிட்டு, அவரவர் சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் பணியாற்றிய சுமார் 300-க்கும் மேற்பட்ட செவிலியர் வேலையிலிருந்து விலகி, அவர்களின் சொந்த மாநிலமான மணிப்பூருக்கு வந்தடைந்ததாக தகவல் வெளியானது. மணிப்பூர் பவனின் துணை ஆணையர் இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். முன்னதாக 185 செவிலியர் வேலையிலிருந்து விலகி மணிப்பூரின் இம்பாலுக்குச் சென்றடைந்தனர்.
இது குறித்து கிறிஸ்டெல்லா என்ற செவிலியர் ஒருவர் கூறுகையில், ”நாங்கள் எங்கள் கடைமையை விட்டு வெளியேறியதில் மகிழ்ச்சியடையவில்லை. இனவெறி பாகுபாட்டால் நாங்கள் அவதிப்பட்டோம். சில நேரங்களில் மக்கள் எங்கள் மீது எச்சில் துப்பினார்கள். பிபிஇ கருவிகள் பற்றாக்குறையால் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர்” என்றார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, மேற்கு வங்கத்தில் இரண்டாயிரத்து 961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 74 பேர் குணமடைந்துள்ளனர். 250 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வாழ்க்கையில் சாதிக்க பாலினம் தடையில்லை: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி!