சென்னையைச் சேர்ந்த பிரபாகரன்(50), சுகன்யா(30) தம்பதியினர், 500 கோடி எம்.எல்.எம் ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர். இதில், பிரபாகரன் கடந்த 2012ஆம் ஆண்டு, தமிழ்நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு சுகன்யாவும் கைது செய்யப்பட்டார். பிரபாகரனுக்கு ஒரு ஆண்டிற்குள் பிணை கிடைத்து சிறையிலிருந்து வெளியே வர முடிந்தது. ஆனால், சுகன்யாவுக்கு பிணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சுகன்யா, கணவர் குறித்த தகவல்கள் கிடைக்காததால் மூன்று குழந்தைகளுடன் ஆந்திராவில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது, பிரபாகரன் ஹைதராபாத்தில் தங்கி இருப்பதாக, சுகன்யாவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
தகவலின் பேரில் கணவரைப் பார்க்க சென்ற சுகன்யா, மற்றொரு பெண்ணுடன் தன் கணவர் வசித்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால், பிரபாகரனோ தனக்கு பக்கவாதப் பிரச்னை உள்ளதால், அப்பெண் பராமரிப்பாளராக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சந்தேகத்தில் சுகன்யா அப்பெண்ணை வீட்டிலிருந்து விரட்டியுள்ளார்.