மத்தியப் பிரதேச மாநிலம் போபால் குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு, நாம் வாழும் சமுகத்தின் மற்றொரு வெட்கக்கேடான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மறுக்கப்பட்ட கல்வியை போராடி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தின் வாசற்கதவுகளை தட்டியுள்ள அந்த பிஞ்சுக் குழந்தையின் வயது மூன்று. ஏதுமறியா அப்பாவி குணம், பால்மணம் மாறா பிஞ்சு முகம், இதனை பார்க்கும் கல்நெஞ்சம் கொண்டோரும் ஒருகணம் கண்ணீர் சிந்தக்கூடும். எந்தத் தவறும் செய்யாத இந்தக் குழந்தையின் வாழ்வில் நடந்ததோ பெரும் சோகம்.
தந்தையும்-தாயும் சண்டையிட்டு பிரிந்துவிட்டனர். தாயின் அரவணைப்பாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. அவளின் தாயார், வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இக்குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்ற அங்கீகாரத்தை அளிக்க அவளின் தந்தையும் மறுத்துவிட்டார். விளைவு, இக்குழந்தைக்கு கல்வி மறுப்பு.