இமாச்சல் பிரதேசம் மணாலியிலிருந்து, லே நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கம் ஆகும். இந்தச் சுரங்கப்பாதைக்கு 'அடல்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதைத் திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 3ஆம் தேதி மணாலி வருகைதருகிறார். இதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பிரினி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற காரை தடுத்து நிறுத்தி குல்லு காவல் துறையினர் சோதனைமேற்கொண்டனர். அப்போது, மூன்று துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. அதில், இரண்டு துப்பாக்கிகள் உரிமங்களுடன், மற்றொருன்று சட்டவிரோதமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, காரில் பயணித்த நான்கு பேரையும் கைதுசெய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருவதற்கு மூன்று நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், துப்பாக்கிகளுடன் கும்பல் சுற்றித்திரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.