உலகம் முழுக்க 201 நாடுகளில் வசிக்கும் மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 468 கேரளர்கள், சொந்த மாநிலத்துக்குத் திரும்புவதற்காக நோர்கா ரூட்ஸ் இணையதளத்தில் (www.norkaroots.org) பதிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வியாழக்கிழமை (ஏப்.30) தெரிவித்தார்.
மலையாளிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் (வளைகுடா, அரபு) வசிக்கின்றனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 660 பேர் வசிக்கின்றனர்.
இதற்கு அடுத்த இடத்தில் சவூதி அரேபியா உள்ளது. இங்கு 47 ஆயிரத்து 268 பேர் வசிக்கின்றனர். அடுத்த இடங்களில் இங்கிலாந்து (2,112), அமெரிக்கா (1,895) மற்றும் உக்ரைன் (1,864) ஆகிய நாடுகள் உள்ளன.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், "வருங்காலத்தில் திரும்பி வருபவர்களின் இறுதிப் பட்டியலை மத்திய அரசுக்கும், அந்தந்த நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களுக்கும் அளிப்போம். போதுமான பயண ஏற்பாடுகளை செய்யவும் முடிவெடுத்துள்ளோம்" என்று கூறினார்.
இவர்கள் தவிர, மற்ற மாநிலங்களில் தங்கியுள்ள 94 ஆயிரத்து 483 மலையாளிகளும் கேரளத்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளதாகவும் விஜயன் தெரிவித்தார். இதில் கர்நாடகாவிலிருந்து 30 ஆயிரத்து 570 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 29 ஆயிரத்து 181 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 ஆயிரத்து 113 பேரும் அடங்குவர்.
இவர்களில் மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் விஜயன் கூறினார். கேரளாவில் புலம் பெயர்ந்தோர் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர்ந்தோரின் அதிகாரப்பூர்வ அமைப்பான அரசு நடத்தும் நோர்கா ரூட்ஸின் www.norkaroots.org என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த வசதியை கேரள அரசு தொடங்கியதும் பெரும்பாலானோர் பதிவு செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த மலையாளிகளில் 90 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகளில் உள்ளனர்.
நாட்டில் லாக்டவுன் முடிவுக்கு வந்ததும், விமான சேவைகள் புத்துயிர் பெற்ற பின்னர் மூன்று அல்லது ஐந்து லட்சம் மலையாளிகள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாட்ஸ் அப் காணொலியால் இல்லறமேற்ற இளம் ஜோடி