ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
76 ஆயிரத்து 614 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,407 பேர் கரோனா தொற்றால் அங்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் நெல்லிமார்லா மண்டலத்திற்குட்பட்ட ஜரஜாபூபேட்டா ( Jarajapupeta) கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் இல்லாததால், குப்பை வண்டியில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த சிலர் இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இந்தக் காணொலி அனைவராலும் பரவலாக பகிரப்பட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.
குப்பை வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட கரோனா நோயாளிகள் கடந்த வெள்ளியன்று (ஜூலை 31) நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என விஜயநகரம் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் (DHMO) தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுபோன்று குப்பை வண்டியில் அவர்கள் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படும்போது வேறுவிதமான நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஏன் மனிதர்களைப்போல் நடத்தப்படவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆப்சென்ட்டான ஆம்புலன்ஸ்; அக்கம்பக்கத்தினர் டார்ச்சரால் தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்!