மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு
சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமான இந்தியா வருகிறார். அப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு வருகிற 11ஆம் தேதி நடக்கிறது.
இரு நாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிறிது தூரம் நடந்து செல்கின்றனர். மேலும் ஐந்து ரதம் அருகே அமர்ந்து புகைப்படம் எடுக்கவுள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பல்லவ நகரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கிய சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலம் காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. காஷ்மீரை பாகிஸ்தானும் லடாக்கை சீனாவும் உரிமை கொண்டாடிவருவது தனிக்கதை.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீன அதிபர் ஷி ஜின்பிங் வரும் 8ஆம் சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்கள் குறித்த பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது, பரஸ்பர உறவு குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன நிலைப்பாடு
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே சீனாவின் செயல்பாடுகள் உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, சந்தித்த கையோடு ஷி ஜின்பிங் இந்தியா வருவது சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சீனாவோடு வர்த்தகப் போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.