2014ஆம் ஆண்டுக்கு பின் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ், பல்ராம்பூர் ஆகியப் பகுதிகளில் பட்டியலின சிறுமிகள் ஆதிக்க சமூகத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அச்சமூக மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் விவகாரத்திற்கு பிறகு பட்டியலின மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தை ஏற்றுக்கொள்வதை விடுதலை உணர்வாக பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் 64 வருடங்களுக்கு முன்னதாக அண்ணல் அம்பேத்கர் 3 லட்சத்து 65 ஆயிரம் மக்களை இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தைத் தழுவச் செய்தார். இது வரலாற்றில் ஒடுக்குதலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மற்றொரு சகாப்தமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்து மதத்தைவிட்டு வெளியேறிய வால்மீகிகள் இந்நிலையில் ஹத்ராஸ் விவகாரத்திற்கு பின் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த 236 பேர் இந்து மதத்தை விடுத்து புத்த மதத்தை தழுவியுள்ளனர். இதைப்பற்றி அம்மக்கள் கூறுகையில், இந்துக்கள் எங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோல் ஹத்ராஸ் விவகாரத்திற்கு பின் மாநில அரசும், காவல் துறையினரும் எங்களுக்கு உதவப் போவதில்லை. அதனால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்” என்றனர்.
இதையும் படிங்க:ஹத்ராஸ் வழக்கு: மாயமான மருத்துவமனை சிசிடிவி காட்சிகள்