கோவையைச் சேர்ந்த துணிக்கடை வியாபாரி ஒருவரின் 10 வயது மகள், 8 வயது மகன் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி கடத்தப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் ஆனைமலை பி.ஏ.பி. கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். இது குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில், மோகன் ராஜ், மனோகரன் என்பவருடன் இணைந்து குழந்தைகளை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவலர்கள் விரும்பினர். அப்போது காவலர் பிடியிலிருந்து மோகன்ராஜ் தப்பியோடினார். அவரை காவலர்கள் என்கவுன்ட்டரில் சுட்டு அதிரடி ஆக்ஷனில் இறங்கினார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவலர்களின் இந்தத் துணிச்சல் நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி சிலாகித்தனர்.
இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனோகரனுக்கு இரட்டை தூக்கு, மூன்று ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மனோகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.