தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா டூ பிகார் : 22 நாள்கள் நடந்தே பயணித்து சொந்த ஊரை சென்றடைந்த கூலித்தொழிலாளி!

தர்பங்கா : மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஏறத்தாழ 2,000 கி.மீ தூரம் நடந்தே பிகார் வந்தடைந்த கூலித்தொழிலாளியின் அவல நிலை அரசின் நிர்வாக இயலாமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

2,000 Km! Bihar's man travels Mumbai to Darbhanga on foot
மகாராஷ்டிரா டூ பிகார் : 22 நாள்கள் நடந்தே பயணித்து சொந்த ஊரை சென்றடைந்த கூலித்தொழிலாளி!

By

Published : Apr 28, 2020, 3:29 PM IST

இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக, நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்த நிலையில் தங்களின் சிறு சேமிப்பும் தீர்ந்துவிட்டதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கூலித் தொழிலாளர்களின் பட்டினிச்சாவுகள் அதிகரித்து வருகிறது.

கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மும்பையில் கூலித்தொழில் பார்த்துவந்த பிகாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஹர்வன்ஷ் சவுத்ரி, இரு மாநிலங்களைக் கடந்து ஏறத்தாழ 2,000 கி.மீ தூரம் நடந்தே வந்து தனது பூர்வீக கிராமத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து சம்பளத்தைப் பெற முடியாமல் தவித்துள்ளார். தங்கியிருந்த இடத்திலிருந்து வீட்டின் உரிமையாளர் விரட்ட, வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூலித்தொழிலாளி ஹர்வன்ஷ் சவுத்ரி, “கடந்த 2 ஆண்டுகளாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 25ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து உணவுக்கூட கிடைக்காமல் தவித்தேன். என்னை வேலையில் சேர்த்த ஒப்பந்தக்காரர் எனக்கு தரவேண்டிய சம்பளத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார்.

எப்படியாவது, சொந்த ஊருக்குப் போய்விடுவதென முடிவெடுத்த நான், எனது வங்கிக் கணக்கிலிருந்து கடைசி பணமான 500 ரூபாயை எடுத்து, ஊர்த் திரும்ப ரயில் டிக்கெட் ஒன்றை முன்பதிவு செய்தேன். நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் எனது டிக்கெட் ரத்துசெய்யப்பட்டதை பின்னர் நான் அறிந்துகொண்டேன். அதன் பிறகு நான் எனது கிராமத்திற்கு நடந்தே செல்வதென முடிவு செய்தேன்” என்றார்.

தனது சொந்த ஊருக்கு எப்படி செல்வதென தெரியாத அவர், கிடைந்த பேருந்தில் ஏறியுள்ளார். அது அவரை மத்திய பிரதேசத்தின் இடர்ஷி மாவட்டத்தில் இறக்கிவிட்டு விட்டுச் சென்றுள்ளது. அங்கே சிக்கிக்கொண்ட அவருக்கு மத்தியப் பிரதேச காவல்துறையினர் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை மனிதாபிமான அடிப்படையில் அளித்துள்ளனர். பிறகு, ஹர்வன்ஷின் பரிதாப நிலையை கண்ட அவர்கள், அவருக்கு இருநூறு ரூபாய் பணத்தையும் அளித்து அனுப்பியுள்ளனர்.

தனது பயணத்தில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்ததை நினைவுப்படுத்தியவர், “உள்ளூர் காவல்துறையினர் தன்னை மிகவும் மோசமாக நடத்தினர். என்னை லத்தியால் அடித்தனர்.” என்றார்.

தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூலித்தொழிலாளி ஹர்வன்ஷ் சவுத்ரியை அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள கோவிட்-19 சிறப்பு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதித்துள்ளனர். தொற்றுநோயின் அறிகுறி இல்லாதபோதிலும் முன்னெச்சரிக்கையாக அடுத்துவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மகாராஷ்டிரா டூ பிகார் : 22 நாள்கள் நடந்தே பயணித்து சொந்த ஊரை சென்றடைந்த கூலித்தொழிலாளி!

ஊரடங்கு காலத்தில் தன்னந்தனியாக 2,000 கிலோமீட்டர் தூரம் நடந்தே பயணித்து வந்திருப்பது பிகார் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :ஊரடங்கு சோதனை: சி.ஆர்.பி.எஃப் வீரரை அடித்து இழுத்துச் சென்ற கர்நாடக காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details