1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்சின் விமானமான ஐ.சி.814 , பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத் - உல் - முஜாஹூதீன் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்தில் 188 பிணைகைதிகளை காப்பாற்ற மவுலான மசூத் அசார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது.
அம்மூவரில் அல் - உமர் - முஜாகஹூதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முஷ்தாக் லத்ரம், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவிவருகின்றனர்.
மூன்றவாது நபரான ஷேக் உமர் என்ற பயங்கரவாதி அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கந்தகார் கடத்தல் சம்பவத்திற்கு பிறகு முஷ்தாக் ரகசிய குற்றச்செயல்களிலும், மசூத் அசார் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.
காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதல், 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தாக்குதல் என பல்வேறு முக்கியத் தாக்குதலுக்கு மூலையாக மசூத் அசார் விளங்கியுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதாமிபாக் ராணுவ தளத்தில் அபக் அகமத் ஷா என்ற சிறுவனை தற்கொலைப்படை தாக்குதல் நடத்த பயன்படுத்தினார். அத்தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
கந்தகார் விமான கடத்தலுக்கு முன்பே சிறையிலிருந்த மசூத் அசாரை காப்பாற்ற அசாரின் சகோதரன் யூசுப் முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு வருடமாக அவர் மேற்கொண்ட சதித்திட்டத்தில், அப்துல் லதீப் என்ற நபர் பணம், கடவுசீட்டு உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தார்.
இந்திய உளவுத்துறை கூடுதல் எச்சரிக்கையுடனும், சரியான நேரத்தில் துரித நடவடிக்கையும் எடுத்திருந்தால் கடத்தல் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம். இந்தக் கடத்தல் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய 'ரா' உளவுத்துறை அதிகாரி கடத்தப்பட்ட விமானத்திலேயே சிக்கியது துரதிஷ்டவசமானது. அந்த அதிகாரி அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் நெருங்கிய வட்டத்தில் இருந்த நபரின் மனைவியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட விமானம் எரிபொருள் தட்டுப்பாட்டால் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது, விமானத்தை மீட்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அந்த விமானத்தில் ரா அதிகாரி சிக்கிக்கொண்டதன் காரணமாக அவரின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டது. அமிர்தசரஸில் எரிபொருளை நிரப்பாமல் அவசர அவசரமாக லாகூருக்கு விமானம் கொண்டுசெல்லபட்டு அங்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.
கந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தின் மூலம் திரைமறைவில் இருந்த பல்வேறு உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஆப்கானிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்பான தலிபான் இயக்கம், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயுடன் கூட்டு வைத்து காஷ்மீரில் பயங்கரவாத்ததை தூண்டும் நடவடிக்கையை மேற்கொண்டதன் விவரங்கள் வெளிவந்தன. அடுத்ததாக, பல்வேறு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மசூத் அசார், காஷ்மீர் இளைஞர்களை மூலைச்சலவைச் செய்து பயங்கரவாதத்தின் பக்கம் இழுக்கும் முயற்சிகள் மேற்கொண்டதன் விவரங்களும் வெளியாகின.
1999ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டவுடன் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை நிறுவிய மசூத் அசார், வடமேற்கு எல்லைப் பகுதியான பாகிஸ்தானின் பால்கோட்டில் இருந்து செயல்பட ஆரம்பித்தார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் பெரும்பாலும் இஸ்லாமாபாத், முசாபராபாத் பகுதிகளில் செயல்பட்டுவரும் நிலையில், இந்திய உளவுத்துறையின் பார்வையானது இப்பகுதிகளை நோக்கியே இருக்கும். எனவே, இந்திய உளவுத்துறையிடமிருந்து மறைவாக செயல்பட வடமேற்கு எல்லையை மசூத் அசார் தேர்வு செய்தார்.
இஸ்லாமியமயத்தை அடிப்படையாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஹிஸ்புல் முஜாஹூதீன், அல் உமர், ஜாமியாத் உல் முஜாஹூதீன் அமைப்புகளில் இருந்து மாறுபட்டதாகும். கிட்டத்தட்ட ஐஎஸ்.ஐஎஸ். அமைப்புக்கு நெருக்கமான கொள்கையைக் கொண்டுள்ள மசூத் அசாரின் அமைப்பு வாஹாபிய அடிப்படைவாதத் தத்துவத்தை கொண்டதாகும். அதற்கு இஸ்லாமிய மதமில்லாத தேசியம் மீதும் அம்மக்கள் மீதும் நம்பிக்கையில்லை.
பயங்கரவாத பயற்சிகளை மசூத் அசாரும் அவரது குடும்பமும் ஒருகிணைக்கும் நிலையில், முக்கிய பயங்கரவாத நடவடிக்கைகள் அவரது நேரடி உத்தரவின்படியே மேற்கொள்ளப்படுகிறது. அதன் விளைவாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உலக அமைதிக்கு மிக அச்சுறுத்தலானதாக உருவெடுத்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அரங்கேறிய கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை கண்டறிந்தவர்கள், இதுபோன்ற தீய சக்திகள் இந்தியாவில் வளராமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 7 நாட்கள் அந்த விமானத்தில் சிக்கிக்கொண்டு மரண வேதனையை அடைந்த அம்மக்களுக்கான நீதி என்பது இன்றளவும் வழங்கப்படவில்லை. இந்த துயரானது மசூத் அசாரை நீதிக்கு முன் நிறுத்தும் வரை ஓயாது. இந்திய ராணுவமும் மசூத் அசாரின் மீது அவ்வப்போது தாகுதல் திட்டங்களை மேற்கொண்டது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பாலக்கோட் தாக்குதல் மசூத் அசார் மற்றும் அவரது பயங்கரவாதத் தளத்தை குறிவைத்தே நடத்தப்பட்டது.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக பிரகடணப்படுத்த பாகிஸ்தானுடன் கைகோர்த்துக்கொண்டு சீனா முட்டுக்கட்டை போட்டுவருகிறது. இது குறித்து இந்தியா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவரும் போதிலும் பலன் கிடைக்கவில்லை.
தேசப் பாதுகாப்பில் சமரசமில்லாமல் இருக்கவேண்டிய பட்சத்தில், கவனக்குறைவு, அலட்சியம் என்பது பெரும் சிக்கலில் தள்ளிவிடும். அப்படியிருக்க, கந்தகார் விமானக் கடத்தலில் நாம் பாடம் கற்றிருக்க வேண்டும். எச்சரிக்கையை ரா அமைப்பு சரியாக கையாண்டிருக்கும் பட்சத்தில் இவ்விவகாரம் வேறுவிதமான முடிவைச் சந்தித்திருக்கும்.
இக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது மட்டுமல்லாது, இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது அவசியமாகும். நாடாளுமன்ற தாக்குதல், பாலக்கோட் பதிலடித் தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் முன் குற்றவாளி அசாரை முன்னிறுத்தல் போன்றவை 20 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விமான கடத்தல் சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள். இதுபோன்ற அசார்கள் மேலும் உருவாகாத வண்ணம் தடுப்பதில் உறுதிகாட்ட வேண்டிய தருணம் இது.
இதையும் படிங்க: 'உத்தரப் பிரதேசம் போறிங்களா ஜாக்கிரதையா இருங்க!’ - அமெரிக்க மக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!