கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்துள்ளது. இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்கிருந்த நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ். சரித், சந்தீப் நாயர், பாசில் பரீத் ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம், 982.5 கிராம் தங்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணைக்கு பாதகம் ஏற்படக் கூடாது என ஸ்வப்னா சுரேஷுக்கு பிணை வழங்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கியக் குற்றவாளி பாசில் பரீத்திடம் விசாரிக்க நேற்று (ஆகஸ்ட் 9) இரண்டு என்ஐஏ அலுவலர்கள் துபாய் சென்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பாசில் பரீத்தை தீவிரமாக விசாரிக்கும் அவர்கள் ஹவாலா பரிவர்த்தனை குறித்த ஆதாரங்களைத் திரட்டிவருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வைரல் வீடியோவால் பெண் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம்!