கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்துவரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர மே 7ஆம் தேதிமுதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன. மத்திய வெளியுறவுத் துறையின் கண்காணிப்பின்கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஓமன், குவைத் ஆகிய இருநாடுகளில் சிக்கியிருந்த கேரளாவைச் சேர்ந்தவர்களைத் தாயகம் அழைத்துவர கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னர் புறப்பட்ட இரண்டு விமானங்கள் நேற்று வந்தடைந்தன.
இது தொடர்பாக கொச்சி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (சியால்) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மீட்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக இயக்கப்பட்ட இரண்டு ஏர் இந்தியா விரைவு விமானங்களில் ஓமான், குவைத் ஆகிய இரு நாடுகளிலிருந்து 362 பேர் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விமானங்களும் நேற்றிரவு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.
மருத்துவ, நிர்வாக அலுவலர்களுக்கு உதவி ஊழியர்களுடன் நிவாரணப் பொருள்கள், கோவிட் -19 பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுஇருந்தன.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, சுகாதாரப் பராமரிப்புடன் அவர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் அல்லது ஏதேனும் சுவாச நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டன.
அறிகுறியற்ற பயணிகளும், பாதிக்கப்பட்ட பயணிகளும், தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பு சீருந்துகள் (டாக்சி), கேரள அரசின் சொகுசுப் பேருந்துகள் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மூலம் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றப்படுவர்” எனத் தெரிவித்தார்.
வந்தே பாரத் திட்டம்: இரு விமானங்களில் தாயகம் அழைத்துவரப்பட்ட கேரள மக்கள்! தோகாவிலிருந்து புறப்பட்ட மற்றொரு ஏர் இந்தியா விரைவு விமானம், ஆறு குழந்தைகள் உள்ளிட்ட 177 பேரை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை கேரளா திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க :இந்தியர்களை மீட்க பறந்துசென்ற பெண் பைலட்டுகள் - குவியும் பாராட்டு!