சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "விபத்து நடந்த ரசாயன ஆலைக்கு இந்தியத் தூதரக அலுவலர்கள் விரைந்துள்ளனர். கர்த்தூமில் நடந்த விபத்து குறித்த செய்தி இப்போதுதான் வந்து சேர்ந்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வருத்தப்படுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, "சூடானில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக அலுவலர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.