கொரோனா காரணமாக ஈரான் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 17 கேரள மீனவர்கள் சிக்கியிருப்பது போன்ற காணொலி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும், 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறமுடியாமல் தவித்துவருகின்றனர்.
தற்போது, அங்கு சிக்கித்தவிக்கும் மீனவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மீன்பிடி கிராமங்களான விழிஞ்ஜம், பூவர், பொழியூரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜே. மெர்சிகுட்டி கூறுகையில், "ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு மாட்டிக்கொண்டிருக்கும் இந்திய மீனவர்களில் 17 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களின் குடும்பத்தாரிடம் அவர்களது மற்ற விவரங்களைக் கேட்டறிந்து, அதை நோர்காவிடம் (புலம்பெயர்ந்தோரின் நலனைக் கவனிக்கும் கேரள அரசின் நிறுவனம்) ஒப்படைப்போம். இந்த விவரங்களை அவர்கள் இந்திய தூதரகத்திடம் கொடுப்பார்கள். இந்தப் பிரச்னையை மத்திய அரசிடம் மாநில அரசு எடுத்துச்செல்லும்" என்றார்.
வெளியேற முடியாத மீனவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு இந்திய மீனவர்கள் மீன்பிடி வேலை காரணமாக ஈரான் சென்றனர்.
இதனிடையே, அங்குள்ள மீனவர் ஒருவர் கூறுகையில், "இங்கிருக்கும் (ஈரான்) கட்டுப்பாடுகளின்படி எங்கள் அறையிலிருந்து வெளியே செல்லக்கூட முடியாது. பிற மீன்பிடி கிராமங்களிலிருக்கும் மக்களைக்கூட தொடர்புகொள்ள முடியவில்லை. எங்கள் குடும்பங்களுடன் சேர எங்கள் நாட்டிலிருந்து உதவி கிடைக்கும் என நாங்கள் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... டெல்லி வன்முறையில் உயிரிழந்த இஸ்லாமிய சகோதரர்கள்: சோகத்தில் குடும்பம்