நாட்டிற்காகப் பணியாற்றும் முனைப்புடன் ராணுவப் பயிற்சி முடித்த 131 இளம் வீரர்கள், ’லடாக் ஸ்கவுட்’ படைப்பிரிவில் இணையும் நிகழ்ச்சி, லே பகுதியில் உள்ள ’லடாக் ஸ்கவுட்’ மையத்தில் நடைபெற்றது.
தற்போது, கரோனா காலக்கட்டம் என்பதால் விதிகளைப் பின்பற்றி வீரர்களிள் பெற்றோர்கள் இல்லாமல் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதிதாக இணையும் வீரர்களது அணிவகுப்பும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய லே பிரிவின் துணை கமாண்டிங் அலுவலர் அருண் சிஜி, "ராணுவத்தில் இணைந்த புதிய வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க படையினராக தேசத்திற்கான சேவையில் தங்கள் வாழ்க்கையை அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும்.
தேசத்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கு ஒரு முழுமையான சபதம் எடுக்கவும், தொழிலின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்காக பாடுபட வேண்டும். லடாக்கின் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இளம் வீரர்களாக ’லடாக் ஸ்கவுட்’ படைப்பிரிவில் சேருவது உண்மையிலேயே ஒரு பெருமையான தருணம் " என்றார்.
மேலும், பயிற்சியின்போது சிறப்பாகப் பணியாற்றிய இளம் ரைபிள் வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.