சமீபத்தில், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புகள் பெரும் விமர்சனத்துக்குள்ளாகின. ஆடையைக் கழற்றாமல் மார்பைத் தொடுவது போக்சோ சட்டத்தின்படி பாலியல் வன்முறை அல்ல என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கணேடிவாலா கருத்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி, குற்றம்சாட்டப்பட்டவரின் தண்டனை காலத்தை குறைத்தார்.
இந்தத் தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறார்களின் கைகளைப் பிடிப்பதும் பேண்ட் ஜிப்பை கழற்றுவதும் போக்சோ சட்டத்தின்படி பாலியல் வன்முறை அல்ல என மற்றொரு தீர்ப்பை வழங்கினார். சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினர் இந்தத் தீர்ப்புகளை விமர்சித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்புகள் தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாலியல் வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்த நீதிபதியை நீதித்துறையிலிருந்து நீக்க வேண்டும் என 13 வயது சிறுமி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே, மூத்த நீதிபதி சந்திரசூட் மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.