சீனா உள்ளிட்ட நாடுகளில் 'கொவிட்-19' (கொரோனா வைரஸ்) பாதிப்புப் பரவி வருகிறது.
இதனிடையே, சீனாவிலிருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகம் வந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பலில் முதியவர், ஒருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் கப்பல் அங்கேயே சிறைபிடிக்கப்பட்டது.
இதில், 138 இந்தியர்கள் உட்பட மூன்று ஆயிரத்து 711 பயணிகள் மற்றும் கப்பல் குழுவினர் சிக்கித் தவித்தனர். இதில், ஆறு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சொகுசுக் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்குமாறு, இந்திய மக்களின் சார்பில் அரசுக்குத் தொடர் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன்படி, இந்தியர்களை மீட்டுவர ஏர் இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த சிறப்பு விமானம் ஒன்று ஜப்பானுக்கு அனுப்பப்பட்டது. இந்த விமானத்தில், இன்று காலை 119 இந்தியர்கள், ஐந்து வெளிநாட்டவர்கள் டெல்லி திரும்பியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்திருந்த ட்வீட்டில், "ஜப்பானில் சிறைபிடிக்கப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்' சொகுசுக் கப்பலில் சிக்கியிருந்த 119 இந்தியர்கள்; இலங்கை, நேபாளம், தென் ஆப்ரிக்கா, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து நபர்களை மீட்டுக் கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்திறங்கியது. மீட்புப் பணிக்குத் தேவையான உதவிகளை அளித்த ஜப்பான் அரசுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.
வைரஸால் பாதிக்கப்பட்ட மற்ற ஆறு இந்தியர்கள் ஜப்பானில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸால் உலகளவில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : கொரோனா பீதி: நாளை சீனா செல்லும் இந்திய மீட்பு விமானம்