குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு 311 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 80 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பூர்வகுடி மக்களின் உரிமைகள் இந்த மசோதாவால் பறிக்கப்படும் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக வடகிழக்கு மாணவர் அமைப்பு சார்பாக கடையடைப்புப் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. பலம்வாய்ந்த மாணவர் அமைப்பு என்பதால் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், 11 மணி நேர பந்த் காரணமாக இணைய சேவைகள் திரிபுராவில் முடக்கப்பட்டுள்ளன.