இந்தியாவில் நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் அயராமல் உழைத்துவருகின்றனர்.
இருப்பினும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள செல்லும் குழுக்கள் அவ்வப்போது தாக்கப்படும் சம்பவங்களும் நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்திலுள்ள ஒரு கிரமத்தில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள ஒரு குழு சென்றுள்ளது. ஆனால், அந்த மருத்துவ குழுவை பணி செய்யவிடாமல் தடுத்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் முயன்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சமர் பகதூர் சிங் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.
மேலும், "கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள அஜியோனா என்ற கிராமத்திற்கு சென்றிருந்த மருத்துவக் குழுவை பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளூர் மக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் உடனேயே காவலர்கள் அங்கு சென்றனர்" என்றார்.
சில நாள்களுக்கு முன்பு, அக்கிராமத்தில் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பரிசோதனை செய்ய அங்கு சென்று மருத்துவ குழு மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தும்: உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?