முதலமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் இன்று (ஜூன்.9) கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, “ தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முழுவதுமாக ரத்து செய்வதாகக் கூறி இருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை தமிழ்நாடு கல்வி வாரியம் அடிப்படையில் பாடத்திட்டங்கள் இருப்பதோடு, தேர்வு முறைகளும் நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து, இது குறித்து கல்வி அமைச்சருடன் கலந்து பேசி, புதுச்சேரி மாநிலத்திலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக முடிவு செய்துள்ளோம்.
தேர்வு ரத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கும் முதலமைச்சர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பத்தாம் வகுப்பில் 16,709 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்த நிலையில், அவர்களுக்கு காலாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் மதிப்பிடப்படுவதோடு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதுபோல பதினோராம் வகுப்பு தேர்வு எழுதுகின்ற 14,553 மாணவர்களுக்கும், எழுதாமல் இருந்த ஒரு பாடத்திற்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவர்களது தேர்ச்சி விகிதமும் பத்தாம் வகுப்பிற்கு பின்பற்றுவது போல செயல்படுத்தப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி, தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - மு.க.ஸ்டாலின் வரவேற்பு!