சம காலத்தில் நாம் சந்தித்து கொண்டிருக்கும் உலகப் பெருந்தொற்று கோவிட்-19. ஆனால், இதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு பெருந்தொற்று நோய்கள் உலகை ஆட்டுவித்தே சென்றுள்ளன.
அதில் மிக முக்கியமான பெருந்தொற்று ஸ்பானிஷ் ஃப்ளூ. 102 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தத் தொற்றுக்குக் காரணமான ஹெச்1என்1 வைரஸ் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைத் தாக்கியது. அப்போதே இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் ஒருவர், தற்போது கரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு இதிலிருந்தும் மீண்டு எழுந்திருக்கிறார். இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் அவருக்கு வயது 106.
இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனை மூத்த மருத்துவர் கூறுகையில், “டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரான இம்முதியவரை, கடந்த 1918ஆம் ஆண்டு அவரது நான்கு வயதில் ஸ்பானிஷ் ஃப்ளு தாக்கியுள்ளது. அதிலிருந்து மீண்டவரை, தற்போது உலகையே அச்சுறுத்தும் கரோனா தொற்றும் தாக்கியது.
ஆனால், கரோனாவிலிருந்தும் அவர் வெற்றிகரமாக மீண்டுள்ளார். அவருடைய மகனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், மகனை விட அந்த முதியவர் மிக விரைவில் குணமடைந்தது ஆச்சரியமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
”மனித வரலாற்றிலேயே ஸ்பானிஷ் ஃப்ளு தான் அதிதீவிரமான பெருந்தொற்றாக அறியப்படுகிறது. இதற்கு காரணமான ஹெச்1என்1 வைரஸ் 1918 - 1919ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பரவியது” என அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் முதன்முதலில் ஒரு ராணுவ வீரருக்குத்தான் இந்தத் தொற்று ஏற்பட்டதாகவும், அங்கு மட்டும் சுமார் ஆறு லட்சத்து 75 ஆயிரம் உயிரிழப்புகள் இந்நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.