டெல்லி: தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பாதுகாப்புத் துறைக்கான 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொருளாதாரம், உள்கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்துதல், மக்கள்தொகை,உள்நாட்டுத் தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.
பிஎல்ஐ மூலம் பயன்பெற விண்ணப்பித்திருக்கும் சாம்சங், ஆப்பிள்-இன் ஒப்பந்த நிறுவனங்கள்!
அதன்படி, பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தப்படும் 101 ராணுவத் தளவாடங்களின் பட்டியலைத் தயாரித்து, அதனை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் தன்னம்பிக்கைக்கு இது ஒரு பெரிய படியாகும். தடைசெய்யப்பட்ட 101 ராணுவத் தளவாடங்களின் பட்டியலில் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.ஹெச். ரேடார்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்புத் துறையில் நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் தளவாடக் கொள்முதலுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை ராஜ்நாத் சிங் சுட்டியுள்ளார். மேலும் அவர் பாதுகாப்புத் தளவாட இறக்குமதிக்கான தடையை 2020 முதல் 2025ஆம் ஆண்டு வரை படிப்படியாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், சக்கரம் பொருத்திய பீரங்கிகள் இறக்குமதிக்கு 2021 டிசம்பர் முதல் தடை விதிக்கப்படும் என்றும், 200 பீரங்கிகள் வாங்க ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நாட்டின் பாதுகாப்புத் துறையில் உள்ள ராணுவத் தளவாடங்கள் பல அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஷேர் சாட் செயலியில், 750 கோடி முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!
இவ்வேளையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பளிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பாதுகாப்புத்துறையின் இந்த முடிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது.