மகாராஷ்டிரா மருத்துவமனையில் பயங்கர தீ - 10 குழந்தைகள் உயிரிழப்பு! - தேசிய செய்திகள்
06:23 January 09
மகாராஷ்டிரா: பண்டாரா மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக, 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 7 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில், நள்ளிரவு நேரத்தில் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட புகையினால், மூச்சடைப்பு ஏற்பட்டு மொத்தம் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 17 பச்சிளம் குழந்தைகளில், 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்தப் பிரிவிலிருந்த 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.