உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், தனது கடைசி பத்து நாள்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து வழக்குகளின் தீர்ப்புகளை அவர் வழங்கவுள்ளார். மதம், பாதுகாப்பு, அரசியல் தொடர்புடைய வழக்குகளில் ரஞ்சன் கோகாய் வழங்கவுள்ள தீர்ப்பு நாட்டையே புரட்டிப்போடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அயோத்தியா வழக்கு
ஐந்து தீர்ப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 40 நாள்கள் தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 16ஆம் நிறைவடைந்தது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கு சொந்தம் என அலாகாபாத் உயர் நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை ஒட்டியே உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை வழக்கு
அனைத்து பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபடலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து 65 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பையும் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கவுள்ளது. முன்னதாக, 10 - 50 வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் வழக்கு
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும்விதமாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டசால்ட் என்ற பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து 36 போர் விமானங்களை வாங்கியது. ஆனால், ஒப்பந்தத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்று அதிக லாபம் அடையும் நோக்கில் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தராமல், உண்மையான விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விமானம் வாங்கப்பட்டதாகக் கூறி மத்தியமுன்னாள்அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, உச்ச நீதிமன்ற மூத்தவழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற வாதத்தை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மத்திய அரசுக்கு ஆதரவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14ஆம் தேதி 2018ஆம் ஆண்டு வழங்கியது. இந்த வழக்கில் தவறான தகவல்களை அளித்து நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது எனக் கூறி யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பையும் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கவுள்ளது.
ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ரஃபேல் வழக்கில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் எனக் கூறியதாக ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையிலும் செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் கூறாத ஒன்றை ராகுல் காந்தி கூறுவதாகவும் இது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர், ராகுல் காந்தி தான் கூறியதற்கு நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பையும் ரஞ்சன் கோகாய் அமர்வு வெளியிடவுள்ளது.
2017 நிதிச்சட்டம் தொடர்பான வழக்கு
பல்வேறு சட்டத்திருத்தங்களை மத்திய அரசு நிதிச்சட்டம் 2017இன் கீழ் நிதி மசோதாவாக நிறைவேற்றியது (அனைத்து சட்டங்களும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நிதி மசோதாவைப் பொறுத்தவரை அரசு மக்களவையில் நிறைவேற்றினால் போதுமானது). ஆனால், இது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர்.
தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க வழிசெய்யும் இந்தச் சட்டத்திருத்தத்தை நிதி மசோதாவாக நிறைவேற்றலாம் என்ற வாதத்தை மத்திய அரசு முன்வைத்திருந்தது. இதன் தீர்ப்பையும் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வே வழங்கவுள்ளது.