சண்டிகர்: இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி ஆகியவற்றை அவசரகாலத்துக்கு பயன்படுத்த இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதுமுள்ள 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் சிந்து தெரிவித்துள்ளார். அவர்களது விவரங்கள் ஏற்கனவே கரோனா தடுப்பூசிக்காக உருவாக்கப்பட்ட 'கோவின்' எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மூன்று லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.