டெல்லி: இந்திய ரயில்வே அமைச்சகம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த 'பாரத் கௌரவ்' ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ாரத் கௌரவ் ரயில் இந்தியா-நேபாளம் இடையே ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும்.
முதல் பாரத் கௌரவ் ரயில் சர்வதேச யோகா தினமான ஜூன் 21ஆம் தேதி டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஒவ்வொரு பெட்டியும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் இந்தியாவின் கலாச்சாரம் தொடர்பான போஸ்டர்கள், கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அதோடு இரண்டு பெட்டிகள் யோகா பயிற்சிக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளில் யோகா பயிற்சியாளர் இருப்பர். விருப்பமுள்ள பயணிகள் அங்கேயே யோகா பயிற்சி மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையை கடந்து அண்டை நாடான நேபாளம் செல்லும் முதல் சுற்றுலா ரயில் இதுவாகும்.