டெல்லி : சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பலிடானா பகுதிக்கு பாரத் கவுரவ் யாத்ரா என்ற சிறப்பு ரயில் சென்று கொண்டு இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நள்ளிரவு நேரத்தில் ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில், ஒரு பெட்டியில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ரயில் நள்ளிரவில் புனே ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குறிப்பிட்ட பெட்டியில் இருந்த பயணிகள் உள்ளிட்டோர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். முதலில் ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதற்கு குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உடல் நலப்பிரச்சினைகளுக்கு ஆளான பயணிகளுக்கு ஐர்சிடிசி மற்றும் ரயில்வே ஊழியர்கள் தரப்பில் உணவு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சினைகளுக்கு ஆளான பயணிகளுக்கு 13 தனியார் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் தலைமையிலான குழு சிகிச்சை அளித்தது.
ஏறத்தாழ 99 பயணிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் அனைவரும் அதே ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பயணிகள் சாப்பிட்ட உணவு மாதிரி பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இது குறித்து விசாரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :உத்தராகண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்டதில் முக்கிய பங்கு வகித்த ஆஸ்திரேலிய நபர்.. யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?