ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் உலகின் முதல் மலேரியா தடுப்பூசியை கண்டறிந்துள்ளது.
இந்தத் தகவலை பாரத் பயோடெக் சர்வதேச வணிக மேம்பாட்டுத் தலைவர் டாக்டர் ரேகாஸ் எல்லா (Dr Rechas Ella) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், கிளாக்ஸோஸ்மித்கிலைன் (GlaxoSmithKline (GSK)) நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் மலேரியா தடுப்பூசி மருந்தை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாரத் பயொடெக் உருவாக்கியுள்ள மலேரியா தடுப்பூசி மருந்து உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆகும். இது உலகளவில் கிடைக்கும். உலக சுகாதார அமைப்பு (WHO) GSK- உருவாக்கிய 'RTS, S' மலேரியா தடுப்பூசியை ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா (சஹாரா பாலைவனத்தின் தெற்கே) மற்றும் அதிக மலேரியா பாதிப்புகளை பதிவுச் செய்யும் மற்ற நாடுகளிலும் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பாரத் பயோடெக் மூலம் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க ஜிஎஸ்கே முடிவு செய்துள்ளது, இது 2028ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 1.5 கோடி டோஸ் தடுப்பூசியை வழங்கும்.
இந்த ஆண்டு ஜனவரியில், ஜிஎஸ்கே, பாரத் பயோடெக் மற்றும் பாத் (Path) (சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ள உலகளாவிய தொண்டு நிறுவனம்) மலேரியா தடுப்பூசி தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கானா, கென்யா மற்றும் மலாவியில் மலேரியா தடுப்பூசி குறித்த ஒரு சோதனை திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு லட்சம் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு முடிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இந்தத் திட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அதன் பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சூழலில், பாரத் பயோடெக் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : உருமாறிய மலேரியா: தப்பிக்கும் கர்ப்பிணிகளும் குழந்தைகளும்