தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2022, 3:25 PM IST

ETV Bharat / bharat

பகத் சிங் மண்ணில் பதவியேற்றார் பகவந்த்!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் சிங் மாண், பஞ்சாபின் 17ஆவது முதலமைச்சராக இன்று (மார்ச் 16) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பகத் சிங் மண்ணில் பதவியேற்றார் பகவந்த்
பகத் சிங் மண்ணில் பதவியேற்றார் பகவந்த்

கட்கர் கலன்:பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றிய நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியது.

தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனில் தனது அமைச்சரவை பதவியேற்றுக்கொள்ளும் என பகவந்த் சிங் மாண் முன்னர் அறிவிந்திருந்தார்.

பகவந்த்தின் மஞ்சள் படை

இந்நிலையில், கட்கர் கலனில் பதவியேற்புவிழாவிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவியேற்புவிழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

முன்னதாக, விழாவிற்கு வரும் ஆண்கள் மஞ்சள் டர்பனும், பெண்கள் மஞ்சள் துப்பட்டாவும் அணிந்து வர வேண்டும் என பகவந்த் சிங் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, கட்கர் கலனில் மஞ்சள் படையாக தொண்டர்கள் அணிவகுத்திருந்த நிலையில், பகவந்த் சிங் மாண் 'பகத் சிங்' எனப் பெயர் பொறிக்கப்பட்ட டர்பனை அணிந்து வந்து, பஞ்சாபின் 17ஆவது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கும், அவரின் அமைச்சரவையைச் சேர்ந்த அனைவருக்கும் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

திமிர் கூடாது...

விழாவில் பேசிய முதலமைச்சர் பகவந்த் சிங் மாண்," எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உங்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன், யாரும் திமிர் பிடித்தவர்களாக மாறிவிடாதீர்கள். நமக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நாம் மரியாதை அளிக்க வேண்டும். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ஆம் ஆத்மி யூனியன் பிரதேசமான டெல்லியில் ஆட்சி செய்துவரும் நிலையில், அம்மாநிலத்தைத் தாண்டி முதல் மாநிலமாக பஞ்சாபில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. 2017இல் அக்கட்சிக்கு இருந்த செல்வாக்கு, தற்போது அதிகரித்திருப்பது பஞ்சாப் தேர்தல் முடிவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

ABOUT THE AUTHOR

...view details