டெல்லி: சீனாவில் அதிகளவில் பரவி வரும் BF.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 3 குஜராத்திலும் 1 ஒடிசாவிலும் கண்டறியப்பட்டது. ஆனால் BF.7 நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் அதில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
BF.7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த மாறுபாடு இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததைக் கண்டறிந்த இங்கிலாந்து, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அதன் பரவலைத் தடுத்தது.
ஆனால் சீனாவில் BF.7 மாறுபாடு பரவுவதற்கு, அந்நாட்டில் உள்ள மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது எனவும், தடுப்பூசி செயல்முறையை செயல்படுத்தாததும்தான் காரணங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆய்வுக்கூட்டம் அனைத்து சுகாதார அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் முகக்கவசம் அணியவும், சானிடைசர் பயன்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம் எதிர்வரும் திருவிழாக் காலங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். BF.7 பரவல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையேயான விமானங்களுக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து ரேண்டம் முறையில் இரண்டு சதவீத மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முதலைமச்சர் ஸ்டாலின் தலைமையிலும் BF.7 மாறுபாடு பரவல் தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தற்போதுவரை தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில்தான் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
BF.7 அறிகுறிகள் என்ன?
முக்கியமாக சுவாசப் பிரச்னைகளைBF.7 மாறுபாடு உருவாக்குகிறது. அதாவது மார்பின் மேல் பகுதி மற்றும் தொண்டையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை தவிர காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகளும் உண்டாகின்றன. சுவாசப் பிரச்னைகள் மோசமடைவதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறு வேண்டும்.
இதையும் படிங்க:மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை