ஹைதராபாத் (தெலங்கானா):ஹைதராபாத் ரயில் நிலையத்தில் நேற்று (ஜூலை 19) ஒரு ஆணின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் தீயணைப்பு வீரர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் லோன் ஆப் மூலம் கடன் பெற்றதும், அதனைச் சரியாக செலுத்த முடியவில்லை என்பதால் தற்கொலை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேநேரம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், சைபராபாத் மற்றும் ரச்சகொண்டா காவல் ஆணையரகங்களில் கடந்த இரண்டு நாட்களில் லோன் ஆப்களால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடரபாக காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
லோன் செயலி நிர்வாகங்கள், கடன் கேட்காவிட்டாலும் குறிப்பிட்ட நபர்களின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி, அவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கின்றனர். அதேநேரம் பெண்கள் மற்றும் இளம் பெண்களின் தொலைபேசியில் உள்ள தொடர்புகளை குறிவைத்து, அவர்களின் வாட்ஸ் அப் டிபியில் உள்ள புகைப்படங்களை சேகரிக்கின்றனர்.
பின்னர் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை நிர்வாணமாக மாற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் அனுப்புகின்றனர். அது மட்டுமில்லாமல், “உங்கள் நண்பர் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அதை உடனே செலுத்தச் சொல்லுங்கள். இல்லையென்றால் நிர்வாண புகைப்படங்கள் வீடியோவாக மாறிவிடும்” என்று போனில் மிரட்டுகிறார்கள்.