ஐதராபாத்: தற்போதைய நவீன யுகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள், வியாபாரிகள் முதல் வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் யுபிஐ மூலம் பணம் அனுப்பி வருகின்றனர். மொபைல் போன்களில் பணத்தை எடுத்துச் செல்லும் கலாசாரம் பரவி வருவதால் பலரின் பாக்கெட்டுகளில் பணம் இருப்பது இல்லை.
க்யூர் ஆர் கோடு அல்லது தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளுக்கு மொபைல் போன் நம்பர் மூலம் நொடியில் பணம் அனுப்பப்படுகிறது. இந்த நடைமுறை நம்மை எவ்வளவு முன்னோக்கி கொண்டு செல்கிறதோ அதேநேரத்தில் சில விபரங்கள் தவறும் பட்சத்தில் அதளபாதாளத்திற்கும் கொண்டு சென்று விடும்.
அதனால் பணப்பரிமாற்றம் மற்றும் ரகசிய எண்களில் எப்போதும் கவனம் வேண்டும். ஒரு சிறு தவறு, நாம் சிறுக சிறுக சேமித்த பணத்தை திருடிச் சென்று விடும். ஆகையால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் குறித்து வங்கி மற்றும் ஆர்பிஐ கூறும் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அப்படி யுபிஐ பணப்பரிமாற்றத்தின் போது ஏற்படும் தவிர்க்க முடியாத தவறுகளை சரி செய்யத் தேவையான சில டிப்ஸ்கள் இதோ. நாம் எதாவது ஒரு பொருள் வாங்கும் போது QR குறியீட்டைக் கொண்டு பணம் செலுத்துகிறோம். இந்த ஸ்கேன் முடியும் முன், விவரங்களை உறுதிப்படுத்த கடைக்காரரிடம் கட்டாயம் கேட்க வேண்டும். அவர் உறுதிப்படுத்திய பின்னரே, நீங்கள் பணத்தை மாற்ற வேண்டும்.
சமூக வலைதளங்களில் உங்களுடன் நட்பு கொள்ளும் மோசடி கும்பல்களால் கட்டாயம் சிக்கல் ஏற்படும். அவர்கள் உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பல்வேறு வகையிலான ஆசை வார்த்தைகளை கூறி டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யும்படி கேட்பார்கள். அவர்களின் வலையில் விழக்கூடாது என்பதில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
அதிக பாதுகாப்பிற்கு, முடிந்தவரை யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு ஆறு இலக்க ரகசிய எண்ணை பயன்படுத்துவது நல்லது. பலர் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள நான்கு இலக்க ரகசிய எண்ணை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் திருமண நாள், பிறந்த நாள் அல்லது ஆண்டுகளையே அந்த நான்கு இலக்க ரகசிய எண் கொண்டு இருக்கும் என்பதால் மோசடிக் கும்பல் அதை எளிதில் கண்டுபிடித்து விட வாய்ப்பு உள்ளது.