மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதியும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதியும், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதியும் நடைபெற்றது.
இந்த நிலையில் நான்காம்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று (ஏப்.10) நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் அரியணையைக் கைப்பற்ற திருணமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் இன்று வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அம்மாநில மொழியான பெங்காலியில் ட்வீட் செய்துள்ள அவர், "மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்றைய வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நான்காம்கட்ட தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்காளர்கள் அடங்கியுள்ளனர். இதில், இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 16 பேர் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். ஒரு லட்சத்து 76 ஆயிரத்து ஓரு நபர்களைக் கொண்ட பாலி மிகச்சிறிய தொகுதி ஆகும். மூன்று லட்சத்து 13 ஆயிரத்து 701 வாக்காளர்களைக் கொண்ட சுஞ்சுரா மிகப்பெரிய தொகுதியாகும்.
இதையும் படிங்க:மம்தாவின் கோட்டையில் களமிறங்கும் அமித்ஷா!