மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகிர் ஹுசைன் கொல்கத்தா செல்வதற்காக நேற்றிரவு (பிப்.17) 8.30 மணிக்கு முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையம் சென்றார். இரண்டாவது பிளாட்பாரத்தில் காத்திருந்த அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
குண்டுகள் வெடித்து சிதறியதில் அமைச்சர் ஜாகிர் ஹுசைன் உள்ளிட்ட 14 பேர் பலத்த காயமடைந்தனர். அமைச்சருக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரையும் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஜாகீர் ஹுசைன் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் ரயில் நிலைய வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அமைச்சர் மீதான தாக்குதலுக்கு மாநிலத்தின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக மேற்பார்வையாளர் கைலாஷ் விஜயவர்ஜியா, “நிம்திதா ரயில் நிலையத்தில் அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது நிகழ்த்தப்பட்ட குண்டு தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரை பார்க்க கைலாஷ் விஜயவர்ஜியா மருத்துவமனைக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...டூல்கிட் என்றால் என்ன?...போலீஸ் ஏன் அதை வேவு பார்க்கிறது?