ஹூக்ளி:மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் ஹவுரா நகரில் கடந்த 30ஆம் தேதி நடந்த ராமநவமி ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைக்கு பாஜகதான் காரணம் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதன் தாக்கம் குறைவதற்குள், கடந்த 2ஆம் தேதி ஹூக்ளியில் பாஜக சார்பில் ராமநவமி ஊர்வலம் நடத்தப்பட்டது. பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது. கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கலவரத்தில் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ பிமன் கோஷ் காயமடைந்தார். மசூதியைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க இணைய சேவை தடை செய்யப்பட்டு, மக்கள் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று(ஏப்.3) ஒரு இடத்தில் வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
மேற்குவங்க அரசால் சட்டம் ஒழுங்கை காக்க முடியவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவினர்தான் காரணம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். பாஜகவினர் திட்டமிட்டு இந்த வன்முறையை நிகழ்த்தியிருப்பதாக குற்றம்சாட்டிய மம்தா, ராமநவமி முடிந்த பிறகு மீண்டும் ஊர்வலம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.