ஹைதராபாத்: மகபூப்நகர் மாவட்டம், படேபள்ளி பகுதியைச் சேர்ந்த பெண்ணை, நபர் ஒருவர் ஆபாசமாக புகைப்படம் எடுப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், ஜலாலுதீன் என்பவரை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ராமுலு, சங்கர், ராமுலு நாயக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 18 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களை குறிவைக்கும் இந்த கும்பல், அவர்களை கோடீஸ்வரியாக மாற்றுவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
முக்கிய குற்றவாளியான ஹைதராபாத்தை சேர்ந்த திருப்பதி, ஏராளமான பெண்களை அணுகி பேசியுள்ளார். அவர்களிடம் 'உங்களது கைரேகை, அந்தரங்க புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள். நான் அதை சாமியார் ஒருவருக்கு அனுப்புவேன். அவர் உங்கள் உடலில் இருக்கும் மச்சத்தை பார்த்து, பணம் சம்பாதிக்கும் வழியை கூறுவார்' என தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெண்கள் திருப்பதியிடம் தங்கள் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் தலைமறைவான திருப்பதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர் என்ன செய்தார்? அந்த சாமியார் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: காதலியின் நிர்வாண வீடியோ.. சுந்தரபாண்டியன் பட பாணியில் நண்பன் கொலை.. பெண் தற்கொலை முயற்சி..