புதுடெல்லி:இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி ஊடக நிறுவனம், பல்வேறு நாடுகளில் கிளைகளை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் செயல்படும், பிபிசி ஊடக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிபிசி அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், செய்தியாளர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில், "பிபிசி அலுவலகத்தில் நாங்கள் சோதனையிடவில்லை. அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கு புத்தகங்களை சரிபார்க்கிறோம். சோதனை முடிவடைந்த பின் ஊழியர்களின் செல்போன்கள் திருப்பி வழங்கப்படும்" எனக் கூறினர்.
இந்நிலையில் பிபிசி ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.